Saturday, October 9

தொடரை வெல்லுமா இந்தியா?

 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பொண்டிங், வட்சன் அரை சதம் அடித்து, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 285 ஒட்டங்கள் எடுத்து இருந்தது. பந்துவீச்சில் இந்தியாவின் ஹர்பஜன் இரண்டு விக்கெட் வீழ்த்தி ஆறுதல் தந்தார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில், வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பெங்களூருவில் துவங்கியது.நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி தலைவர் பொண்டிங் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். 


 இந்திய அணியில் முதல் டெஸ்டில் இடம் பெற்றிருந்த காம்பிர், லட்சுமண், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதிலாக தமிழகத்தின் முரளி விஜய், ஸ்ரீசாந்த் மற்றும் அறிமுக வீரராக சத்தீஸ்வர் புஜாரா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் போலிஞ்சர் நீக்கப்பட்டு, பீட்டர் ஜார்ஜ் அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலிய அணிக்கு வட்சன், காடிச் இருவரும் துவக்கம் கொடுத்தனர். வழக்கம் போல காடிச் நிதானமாக துவங்க, மறுமுனையில் வட்சன் , ஸ்ரீசாந்தின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஒட்டங்கள் அடித்து அதிரடியை வெளிப்படுத்தினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த வட்சன் , ஓஜாவின் பந்தில் நான்கு ஒட்டம் அடித்து, 11வது அரைசதம் கடந்தார். 


முதல் விக்கெட்டுக்கு 99 ஒட்டங்கள் சேர்த்த நிலையில், 43 ஒட்டங்கள் எடுத்த காடிச், ஹர்பஜன் பந்தில் சிக்கினார். திறமையாக விளையாடிக் கொண்டிருந்த வட்சனை (57), பிரக்யான் ஓஜா வெளியேற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கிளார்க்கை (14), ஹர்பஜன் திருப்பி அனுப்பினார். அடுத்து பொண்டிங், ஹசி ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். இந்நிலையில் ஹசி (34,) ஜாகிர் வேகத்தில் வீழ்ந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டிங், சர்வதேச டெஸ்ட் அரங்கில், 54வது அரைசதம் கடந்தார். இந்தியாவுக்கு எதிராக இது 8வது அரைசதம் ஆகும். இவர் ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரெய்னாவின் பந்தில் அவுட்டானார். பின் நோர்த்தும், பெய்னும் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 285 ஒட்டங்கள் எடுத்திருந்தது. நோர்த் 43, பெய்ன் ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காகாமல் களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் ஹர்பஜன் சிங் 2, ஜாகிர் கான், பிரக்யான் ஓஜா, ரெய்னா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லலாம் எண்ட முனைப்புடன் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடுகின்றன. முடிவை பொறுத்திருந்து பார்ப்போம். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.